கிறிஸ்மஸ் மரம்
உலகில் இன்றைக்கு " கிறிஸ்துமஸ் " பெருவிழாவைக் கொண்டாடுகிறவர்கள் "கிறிஸ்மஸ் மரம்" இல்லாமல் கொண்டாடுவதில்லை என்கிற அளவுக்கு ஒரு முக்கியத்துவம் பெற்றுவிட்டதை நாமறிவோம். கிறிஸ்தவர்களிடையே எப்படி இந்தப் பழக்கம் உருவானது? அந்தப் பழக்கம் எப்போதிருந்து வழக்கமானது? நல்லதோ கெட்டதோ நமது அப்பம்மாக்களுக்கு அவர்களது அப்பப்பாக்கள், அம்மம்மாக்கள் வழிவழியாக விட்டுச்சென்ற பழக்கத்தை கெட்டியாகபிடித்துக் கொள்கிறோம். கால மாற்றத்திற்கு ஏற்ப சிறுசிறு மாற்றங்களோடு அத்தகைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்கிறோம். பழையன கழிதலும், புதியன புகுதலும் இதன்பாற்பட்டதுதானோ!
நதிமூலம்:
வரலாறுகளில் நாம் பின்னோக்கி வழுக்கியபோது, சிக்கிய தடயங்களை, இயந்திரகதியாய் இயங்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்குச் சொல்லி வைக்கலாமே என்ற எண்ணம் எழுந்ததன் விளைவுதான் இங்கே.. இந்தக் " கிறிஸ்மஸ் மரம் " முளைவிடக் காரணமாகிப் போனது.
"கிறிஸ்மஸ் மரம்" ஐரோப்பிய நாடுகளிலிருந்து வேர்விட்டு முளைத்துத் தழைத்துச் செழித்து இன்று உலகெங்கும் விருட்சமாக படர்ந்துள்ளது. நதிமூலம் பார்க்கிறபோது நம்மை 11ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு இட்டுச் செல்கிறது. மக்கள் மனம் மகிழ கனிவகைகளை, எதிர்பார்ப்பின்றி அள்ளித் தருகிற மரங்களுக்கு நன்றிகூறும் நற்பண்பில் ரோமானியர்களும் இங்கிலாந்தினரும் திளைத்திருந்திருக்கின்றனர். கிறிஸ்து பிறந்த மாதமான டிசம்பர் மாத முதல் வாரத்தில் மரங்களை சிவப்பு ஆப்பிள்களால் அலங்கரித்து ஆராதித்திருக்கின்றனர்.
15ம் நூற்றாண்டில்தான் வீடுகளில் மரங்களை வைத்து மகிழ்ந்து கொண்டாடியிருக்கின்றனர். ஆதாம் - ஏவாள் தினமாக டிசம்பர் 24ம் தேதியை நிர்ணயித்து, மனிதப்புனித சந்ததி உருவாக காரணமாயிருந்த "கனி" மரத்தினை வீடுகளில் வைத்தனர். மரங்களை குட்டை, குட்டையாக வெட்டி எடுத்து வீடுகளில் வைத்து அலங்கரித்து ஆனந்தப்பட்டிருக்கின்றனர்.
முதல் மரம்:
"கிழக்கு பிரான்சு நாட்டில் மேற்கு ஜெர்மனியின் எல்லைக்கோட்டை ஒட்டி அமைந்துள்ள அல்சாஸில் (Alsace ) முதல் "கிறிஸ்மஸ் மரம்" வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் பிரான்சு தேசம் முழுவதும் வீடுகளில் வைக்கும் பழக்கம் ஏற்பட தொடர்ந்து ஜெர்மனி, ரோம், நார்வே, ஆஸ்திரியா என வழக்கம் பல விழுதுகளாய் கால் பரப்பியிருக்கிறது.
பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட், விண்ட்ஸர் கோட்டையில் 1841ம் ண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் மரத்தை வைத்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்மஸ் செய்தி விடுத்தார். அந்தக் கிறிஸ்மஸ் மரம் நார்வே நாட்டு மக்களின் அன்புப் பரிசாக அளிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் கைகொடுத்து உதவியதற்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் முகமாக இந்த மரத்தை அளித்தனர். இதனையடுத்து இங்கிலாந்து முழுவதும் வீடுகளில் கிறிஸ்மஸுக்கு கிறிஸ்மஸ் மரங்களை வீட்டில் வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர்.
அறுவடைத் திருநாள்:
இங்கிலாந்தில் பாகான் என்ற இனத்தவர்கள் மதச் சடங்குகளில் மரங்கள் வைப்பதை வழக்கமாகக் கொண்டு வந்திருக்கின்றனர். எப்படி தமிழகத்தில், சடங்கோ, திருமணமோ, கோவில் திருவிழாக்களோ வாழை மரம்முக்கிய பங்கு வகிக்கிறதோ அதுபோல இங்கிலாந்திலும் இடம் பெற்றே வந்திருக்கிறது. ட்ரூயிட்ஸ்(Druids) என்பார் (விவசாயத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஓக் மரங்களைஅலங்கரித்து பழங்களை தொங்கவிட்டு சிறு மெழுகுவர்த்தி விளக்குகளை மரக் கிளைகளில் தொங்கவிட்டும் தங்கள் அறுவடைத் திருநாளைச் சிறப்பித்திருக்கின்றனர்.
ரோமானியர்கள், சேட்டர்நலியா என்ற கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னரே வரும் விழாநாளிலேயே மரங்களை அலங்கரித்து மரத்தைச் சுற்றி பரிசுப் பொருட்கள் இனிப்பு வகைகளை வைத்து கொண்டாடும் பழக்கத்தை உடையவர்களாய் இருந்திருக்கின்றனர்.
11ம் நூற்றாண்டில் வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பியவில் வசித்த வைக்கிங் இனத்தவர்கள், பனிக்காலமானாலும் வெய்யில் காலமானாலும் என்றும் தன் பசுமைப் புன்னகை மாறாத பைன், ஸ்புரூஸ், சைப்ரஸ், யீ அல்லது ·பர் போன்ற மரங்கள், துயர் மிகுந்த இருண்ட பனிக்காலம் மறைந்து மீண்டும் வசந்தத்தை வருவிக்கும் உன்னத மரங்கள் என நம்பினர்.
உயிர்த்தெழுந்தது:
அது சரி. மரம் எப்படி கிறிஸ்மஸ் விழாவின் பிரிக்கமுடியாத அங்கமானது? அதைக் கடைசிவரை சொல்லாமல் சஸ்பென்ஸா கொண்டு போறேனேன்னு பாக்குறீங்களா? இதோ உங்கள் ஆவல் பூர்த்தியாகும் நேரம் வந்துவிட்டது!
ஜெர்மானிய கத்தோலிக்க கிறிஸ்தவ போதகரான புனிதர் St.போனி ஃபேஸ் (St.Boniface) என்பார்தான் இதற்கு மூல காரணமாகக் கருதப்படுகிறார். ஜெர்மானிய பாகான் இனத்தவர்கள் தங்கள் தேவைகளுக்காக 'ஓக்' மரங்களை வெட்டி அழித்து வந்தனர். மின்சாரம் இல்லாத அந்நாட்களில் குளிரை விரட்ட 'ஓக்' உருட்டுக் கட்டைகள்தான் வீட்டு "Fire Place"ல் பயன்படுத்திவந்தனர். குடும்பங்களை வெதுவெதுப்பாக, கதகதப்பாக வைத்திருப்பதில் மையப் பொருளாக 'ஓக்' திகழ்ந்தது.
இப்படியே மரங்கள் வெட்டி அழிக்கப்படுமானால் எதிர்கால சந்ததியினருக்கு மரங்களின் முகவரியே தெரியாமல் போய்விடும். எனவே ஒரு 'ஓக்' மரம் வெட்டப்பட்டால் அந்த இடத்தில் மூன்றாம் நாளே ஒரு மரக் கன்று துளிர் விட வேண்டும். எப்படி, மரித்த மூன்றாம் நாள் கிறிஸ்து உயிர்த்து எழுந்தாரோ அதைப் பிரதிபலிக்க வேண்டும், என்று புனிதர் போனிஃபேஸ் வேண்டுகோள் விடுத்தார். இதன் பிறகு ஜெர்மானியர்கள் ஒரு 'ஓக்' மரம் வெட்டினால் ஒரு 'ஓக்' மரம் அல்லது ஒரு '·பிர்' மரத்தை நட்டு உயிர்ப்பித்தனர். கிறிஸ்துவின் நினைவாக இதனைச் செய்யத் தலைப்பட்ட ஜெர்மானிய பாகான் இனத்தவர்கள், கிறிஸ்து பிறக்கிற மாதங்களில் தங்கள் இல்லங்களில் 'ஓக்' மரங்களையோ '·பிர்' மரங்களையோ அலங்கரித்து வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர்.
இந்தப் பழக்கம் மெல்லமெல்ல ஐரோப்பா நாடுகளில் பரவியதோடு ஜெர்மானியர்கள் அமெரிக்காவில் குடியேறியபோதுஅமெரிக்காவிலும் பரவி, அன்றும், இன்றும், என்றும் என கிறிஸ்மஸ்ஸும் கிறிஸ்மஸ் மரமும் பிரிக்க இயலாத அளவுக்கு ஆகிவிட்டது.
மார்ட்டின் லூத்தர்
இன்னொரு ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல் ஒன்றும் உள்ளது. கிறிஸ்தவ மதத்தின் கோட்பாடுகளில் முரண்பட்டுப்புரட்சி செய்து புரட்டெஸ்ட்டண்ட்டிசத்தை நிறுவிய தளகர்த்தரான மார்ட்டின் லூத்தர் இவ்வழக்கத்திற்கு காரணவாதி என்பாரும் உண்டு.
மரங்களடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு இரவு மார்ட்டின் லூத்தர் நடந்து போய்க்கொண்டிருந்தார். அந்தக் காட்டு வெளியிடையில் கண்ட காட்சி அவரை மெய் மறக்கச் செய்தது. அந்த அற்புத வனத்தில் இருளைக் கிழித்துக் கொண்டு வானத்து நட்சத்திரங்கள் இடம் பெயர்ந்து மரக்கிளைகளில் வந்தமர்ந்தது போன்ற ரம்மியமான காட்சியைக் கண்டார்.
தென்றல் காற்றின் தாலாட்டலில் அசைந்தாடும் இலைகளை ஊடுருவி மின்மினிப் பூச்சிகளைப்போல் சஞ்சரிக்கிற நட்சத்திரங்கள் தருகிற உணர்வில் சொக்கிப் போனாராம் மார்ட்டின் லூத்தர். சோகங்களைக்கூடச் சோரம் போக வைத்து, சிந்தனையில் தெளிவினைச் சேர்க்கும் சக்தி பீரிட்டெழுவதை மன வானில் கண்ட மார்ட்டின் லூத்தர் மனதிற்குள் ஒரு யோசனையும் பூத்தது.
வானத்து நட்சத்திரங்கள் வனத்துக்கு மட்டுமா சொந்தம்? என்வீட்டுக்கும் சொந்தமே என்கிற அவரின் நினைவுகள் நிச்சயித்தது ஒன்றை; என்றும் பசுமையான ஒரு சிறிய மரத்தை அவரே வெட்டினார். வீட்டிற்கு எடுத்துச் சென்றார். காட்டில் கண்டதை வீட்டில் பார்க்க ஆசை; அவருடைய கரங்கள் அந்த மரத்துக்கு அழகுசேர்த்தது.
ஒளியுமிழும் மெழுகுவர்த்தி விளக்குகள் கொண்டு அதன் கிளைகளுக்கு வெளிச்ச உயிர் கொடுத்தார். வனம் போன்ற வனப்பு அங்கே மிளிர்ந்தது. அந்த இனிய நாள் "கிறிஸ்மஸ்" கொண்டாட்டங்களில் இல்லங்கள் எல்லாம் முகிழ்த்திருந்த நன்னாள்! அடுத்தடுத்த "கிறிஸ்மஸ்" கொண்டாட்டங்களில் "X'MAS TREE" விதவிதமான அலங்கரிப்புகளோடு முக்கியத்துவம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
கிறிஸ்மஸ் தாத்தா
குட்டையான, குண்டான உருவம், குழாய் புகைப்பான், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா.... இதுதான் "ஸாண்ட்ட கிளாஸ்!"
சரி, கிறிஸ்மஸ் தாத்தா தயார்! அவருக்கு வாகனம், வாகனம் இனிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் தயாரா?!. அவ்வளவுதான், கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார்.
மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைக்கு உலகெங்கும் பரவி அவருக்கே உரித்தான சிவப்பு உடையில் வெண்தாடி, கண்கண்ணாடி சகிதமாக வலம் வரத்துவங்கிவிட்டார்! சாண்ட்டா என்றும் சாண்ட்ட கிளாஸ் என்றும் அன்போடு குழந்தைகள் குதூகலித்துக் கொள்வதைநாமறிவோம்! உலகில் எந்தக் கிறிஸ்தவக் குழந்தையிடமும் சாண்ட்ட கிளாஸ் என்றால் அறியாத குழந்தைகளே இல்லை எனலாம்.
17ம் நூற்றாண்டில் நியூயார்க்கில் குடியேறிய டட்ச் ( Dutch ) இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸ் என்று அறிமுகப்படுத்தியவர் பின்னாளில் சாண்ட்ட கிளாசாக வலம் வரத் துவங்கினார். டச்சு இனத்தவர் சிண்ட்டர் க்ளாஸை அறிமுகப்படுத்தியபோது புனித நிக்கோலஸ் பிஷப் ஆக யிருந்தபோது அவர்அணிந்த சிவப்பு அங்கி போன்ற டையையும் அவர் பயன்படுத்திய வெள்ளைக் குதிரையையும் அறிமுகம் செய்தனர். அதுவே சில மாற்றங்களுடன் பின்னர் சாண்ட்ட கிளாஸ் ஆடைகளாக மாறின.
அதாவது 1773ல் அமெரிக்கன் பிரஸ் வெளியீட்டில் "St. A Claus," என்று பிரசுரிக்கப்பட்டது. ஆனால் 1809ல் புகழ்பெற்ற எழுத்தாளர் வாஷிங்டன் இர்விங் செயிண்ட் நிக்கோலஸ் தான் சாண்ட்ட கிளாஸ்என்பதை பல்வேறு ஆதாரங்களோடு சுட்டுகின்றார். " நியூயார்க்கின் வரலாறு என்ற அவரின் புத்தகம் டச்சு-அமெரிக்கன் செயிண்ட் நிக் எப்படி சாண்ட்டாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்று தெளிவுபடக் கூறியுள்ளார்..
Night Before Christmas ஐ எழுதிய கிளமெண்ட் க்ளார்க் மூர்தான் ரெயிண்டீர், சண்ட்ட கிளாஸ் வர்ணணைகளைப் பற்றி எழுதினார் என்றாலும் 1860லிருந்து 1880 வரை வெளிவந்துகொண்டிருந்த ஹார்ப்பெர் வாராந்திர சஞ்சிகையின் கிறிஸ்மஸ் சிறப்புவெளியீட்டில் தாமஸ் நாஸ் ( Thomas Nast ) சாண்ட்ட கிளாஸ் வடதுருவத்தில் வசிப்பது, குழந்தைகள் விரும்பி என்பது உட்பட பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்டு எழுதினார். 1931ல் Coca-Cola நிறுவனம் சாண்ட்ட கிளாஸ் தொடர் விளம்பரங்கள் படக்கதை போல வெளியிட்டது.
நிக்கோலஸ் வரும் இரவு, குழந்தைகள் ஒரு சிறு புல் கட்டு அல்லது வைக்கோல் கட்டு ஒன்றை அவரது குதிரைக்காகவும் அவர்களுடைய காலணிகளை வீட்டின் நுழைவு வாயிலுக்கு வெளியே வைத்துவிடுவார்கள். ( இப்போதெல்லாம் தங்கள் பரிசுப் பொருட்களை சாண்ட்டா விட்டுச் செல்ல கிறிஸ்மஸ் மரத்தில் பெரிய காலுறைகளை தொங்கவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்! )
காலையில் எழுந்து பார்க்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வைத்திருந்த புற்கட்டு மாயமாய் மறைந்திருப்பதையும் அவர்கள் காலணியில் இனிப்புகள், உண்ணும் பருப்பு வகைகள், பரிசுகள் என்றிருப்பதைக் காண்பார்கள். இரவு நிக்கோலஸ் வைத்துவிட்டுச் சென்றதாக குழந்தைகள் நம்பி மகிழ்வது வழக்கம். நள்ளிரவில் வைக்கோலை அகற்றி அனைத்தையும் அவர்களின் பெற்றோர்கள் வைப்பது மட்டும் பரம ரகசியமாகவே இருக்கும்!
ஜெர்மனியில் புனித.நிக்கோலஸ் ஒரு உதவியாளரோடு பரிசுப்பொருட்களை ஒரு கோணிப்பையில் எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு வினியோகிக்கும் பழக்கம் இருந்திருக்கின்றது. நல்ல குழந்தைகளுக்கு புனித நிக்கோலஸ் பரிசுகள் கொடுப்பதும், பெற்றோர்களுக்கு கீழ்படியாத குழந்தைகளுக்கு உடன் வரும் உதவியாளர் தன் கையில் வைத்திருக்கும் குச்சியால் மெல்லச் சில அடிகள் கொடுத்து எச்சரிக்கையாக இருந்தால் அடுத்த ஆண்டு நிக்கோலசின் பரிசு கிடைக்கும் என்று சொல்வதும் வழக்கமாக இருந்திருக்கின்றது.
இத்தாலியில் லா பெஃபானா என்ற நல்ல சூனியக்காரி உடல் முழுக்க கறுப்பு உடை அணிந்து சனவரி 6ம் தேதியன்று (Epiphany) குழந்தைகளுக்கு பரிசுகள் அளிக்கும் வழக்கம் காணப்பட்டிருக்கின்றது. ஸ்பானிஷ் பேசும் நாடுகளான தென் அமெரிக்கா, போர்ட்டோ ரிக்கோ, மெக்சிக்கோ ஆகிய நாட்டுக் குழந்தைகள் மூன்று ராஜாக்கள் தங்களுக்கு வெகுமதிகளைக் கொண்டு தருவதற்காகக் காத்திருப்பார்கள்.
பிரான்சில் கிறிஸ்மஸ் தந்தை அல்லது பெரி நோயல் (Pere Noe) குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுப்பதும், சுவிட்சர்லாந்தில் குழந்தை யேசுவே பரிசுகள் அளிப்பதாகவும் சில நகர்புறங்களில் தேவதைச் சிறுமி வானகத்திலிருந்து இறங்கி வந்து பரிசுகள் கொடுப்பதாகவும் பழக்கம் உள்ளது. ஸ்காண்டிநேவியன் நாடுகளில் யூலிநிஸ்ஸே (julenisse) என்ற மாய உருவம் பரிசுகள் அளிப்பதாகவும், இங்கிலாந்தில் சாண்ட கிளாஸ் பரிசுகள் அளிப்பதாகவும், அமெரிக்காவில் எட்டு ரெயிண்டீர் இழுத்துச் செல்லும் ரதத்தில் அமர்ந்து சாண்ட்ட கிளாஸ் பவனியாக வந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கிச் செல்வதாகவும் இன்றளவும் நிலவி வருகின்ற பழக்கமாகும்!
புனித நிக்கோலஸ் !
கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் இன்று எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை என்ற அளவுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவும் கிறிஸ்துமஸ்சும் ஐக்கியப்பட்டுப் போனது. கிறிஸ்மஸ் தாத்தா தோன்றிய விதம் குறித்து அலசினால் அவருக்கும் ஒரு பின்னனி உண்டு என்பதை அறியலாம்! உண்மையில் புனித நிக்கோலஸ் தான் சாண்ட்டகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தா உருவாகக் காரணம் என்று சொல்லவேண்டும்.
புனித நிக்கோலஸ் ரோமன் கத்தோலிக்க பிஷப் வார்! நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வாழ்க்கையின் அடித்தள மக்களின் மேம்பாட்டிற்காகவும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்க்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டஅற்புதர் அவர்!
"உன் வலக்கரம் செய்தது இடது கரம் அறியக்கூடாது " என்ற வேத வசனத்திற்கு ஒப்ப வாழ்ந்த அவர் மக்களின் தேவையறிந்து அதனை அவர்கள் அறியாமல் நிறைவேற்றி வந்தார். ஆலயத்தில் தங்கள் தனிப்பட்ட வேண்டுதல்களை, மனக் குறைகளை பாவசங்கீர்த்தனம் ( பாவமன்னிப்பு ) செய்யும்போது சொன்னால் அவர்களின் குறைகள் நீங்க விசேடமாகப் பிரார்த்திக்கப்படும் என்று புனித நிக்கோலஸ் அறிவித்திருந்தார்.
அதன்படி மக்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் புனித நிக்கோலஸிடம் பாவமன்னிப்பு கோரிச் சென்ற போது தங்கள் குறைகளையும் சொல்லத் துவங்கினர். உண்மையிலேயே அவர்கள் சொல்லும் குறைகள் நியாயமானதுதானா? என்றறிந்து அவர்கள் அறியாமல் உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இப்படி ஒரு சமயம் புனித நிக்கோலஸ் செய்யத் துவங்கிய உதவியே அவர் அதுபோன்ற உதவிகள் தொடரக்காரணமானது! ஒரு மனிதர் தனது மகளின் திருமணத்திற்கு நகைகள் செய்யவோ, ஆடை ஆபரணங்கள் வாங்கவோ வழியின்றி மிகுந்த துயருக்கு ஆளாகி வேதனையுற்றிருந்தார்.
அந்த மனிதருக்கு மூன்று பெண் குழந்தைகள்! மூன்று பேரையும் எப்படிக் கரைசேர்ப்பேன் என்று தெரியாமல் புலம்பித் தவித்தார். குளிர்காலம் முடிந்ததும் வசந்த காலத்தில் மூத்தபெண்ணுக்குத் திருமணம் செய்வதென்று நிச்சயிக்கப்பட்டது. தனது இயலாமையை பாவ சங்கீர்த்தனத்திற்குச் சென்றபோது அந்த மனிதரும் எல்லோரைப் போலவே தழுதழுத்த குரலில் சொல்லி அழுது மன்றாடி வந்தார்.
கொடுக்கின்ற தெய்வம்
ஆனால் குளிர்கால விழா எங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் மூன்று பெண்களுக்குத் தந்தையான அவர் மனம் சோர்ந்துபோய் அவருடைய வீடும் எந்தவிதமான மகிழ்ச்சியுமின்றி சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. அந்தச் சோகத்திலேயே அந்த இரவு உறங்கியும் போனார்கள். நள்ளிரவு ஏதோ ஒரு பொருள் "பொத்" தென்று விழுந்த சத்தம் கேட்டு அந்த மனிதர் எழுந்து சென்று பார்த்தார். வீட்டின் புகைபோக்கிக்கு நேர் கீழ் ஒரு பை கிடந்ததைக் கண்டார்.
அந்தப் பையைத் திறந்து பார்த்த அவருக்கோ பெருத்த ஆச்சரியம்! தன் மகள் திருமணத்திற்கு என்ன செய்வேன் என்று ஏங்கித் தவித்த மனிதனுக்கு விடையாகக் கிடைத்தது போல தங்க ஆபரணங்களும், பணமும் இருந்தது கண்டு திகைத்துப் போனார். "கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பொத்துக்கொண்டு கொடுத்தது" என்று சொல்வது போல தெய்வம் கொடுத்தது என்று சொல்லி மகிழ்ந்து மகளின் திருமணத்தை தடபுடலாக நடத்தினார்.
அதே போல தனது இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதும் அவருடைய பணமுடை அவரைச் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் முதலில் தெய்வம் கொடுத்தது போல புகைபோக்கியை பொத்துக்கொண்டு இந்தமுறை கொடுக்கும் என்பது என்ன நிச்சயம்? ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்தது! முன்பு புகைபோக்கி வழியே கிடைத்ததைப் போலவே இந்த முறையும் கிடைத்தது. விழுந்த சத்தம் கேட்டதும் வீட்டிற்கு வெளியே ஓடிச் சென்று பார்த்தார். தூரத்தில் யாரோசெல்வது மட்டும் தெரிந்தது. ஆனால் உருவம் யார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
மூன்றாம் மகள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மனிதர் நள்ளிரவு வரை விழித்திருந்து புகைப்போக்கியையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தமக்கு உதவி செய்கின்ற அந்த உருவத்தைப் பார்க்க ஆவல் கொண்டிருந்ததால் அவ்வாறு நள்ளிரவு வரை விழித்திருந்து அந்த உருவத்தின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். அவர் எதிர் பார்த்த அந்த நாளும் வந்தது. நள்ளிரவில் ஒரு பை "பொத்" என்று விழுந்ததும் தயாராக திறந்து வைத்திருந்த கதவைத் தாண்டி வெளியே ஓடிப் பார்த்தபோது, சிவப்பு அங்கியணிந்திருந்த அந்த உருவம் வெள்ளைக் குதிரையொன்றில் தாவி ஏறவும் இவர் அவரை யார் என்று பார்க்கவும் சரியாக இருந்திருக்கின்றது.
அவர் கண்கள் ஆச்சரியத்தால் நிறைந்து போயிருந்தது. அந்த உருவத்துக்குச் சொந்தக்காரர் புனித நிக்கோலஸ்! புனித நிக்கோலஸ் தான் உதவியது குறித்து யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு அந்த மனிதரை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். அந்த மனிதப் புனிதர் நிக்கோலஸ் வாழ்ந்த காலம் வரை தேவையுள்ளோர் யார் என்பதறிந்து அவர்கள் வீட்டின் புகைபோக்கி வழியாக அவ்வீட்டார் அறியாமல் பொன்னோ பொருளோ போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அவர் புகை போக்கி வழியாக பரிசுகளை, வெகுமதிகளை உள்ளே போட்டுவிட்டு அந்த வீட்டிலுள்ளவர்கள் என்ன? யார் என்று கவனிப்பதற்குள் தனது வெள்ளைக்குதிரையில் பறந்துவிடுவாராம். சிறுவர் சிறுமியருக்கு சிறுசிறுபரிசுப் பொருட்களையும் அவர்கள் வீடுகளுக்குச் சென்று போட்டுவிட்டு பின்னர் அவர்கள் அகம் மகிழ்வதைக் கண்டுமகிழ்ந்தார்!
வழக்கம் பழக்கமானது
அவர் மறைவுக்குப் பின் அவர் மேற்கொண்டிருந்த அப் பழக்கமே பின்னர் சாண்ட்ட கிளாஸ் என்ற உருவாகச் சித்தரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு புகை போக்கி வழியாக குழந்தைகளுக்கு பரிசுகளை அளிக்கும் வழக்கம் பின்பற்றப்படலாயிற்று. குட்டையான தடித்த உருவம், நீண்ட வெண்தாடி, சிவப்பு வெல்வெட் வண்ண உடையின் ஓரங்களில் வெண்பகுதி அலங்கரிக்க, சர்க்கஸ் கோமாளி போன்ற சிவப்புவண்ணத்தில் குஞ்சம் வைத்த குல்லா, ஒரு மூக்குக் கண்ணாடி இடுப்பில் அகன்ற தோல் பட்டை பெல்ட், முதுகில் தொங்கும் பரிசுப்
பொருட்கள் அடங்கிய ஒரு பெரிய பை....இதுதான் கிறிஸ்மஸ் தாத்தா! அது மட்டுமா? கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு கடிதம் போட்டால் அவர் வாழ்த்து அனுப்புகின்றதிலிருந்து முக்கிய இடங்களுக்கு திடீர் விசிட் அடித்து குழந்தைகளை மகிழ்விக்கச் செய்வது வரை உலகின் பல பகுதிகளில் கிறிஸ்மஸ் தாத்தா சாண்ட்ட கிளாஸாக பவனி வந்து கொண்டிருக்கின்றார்.
ஆனால் சுவீடனில் புனித லூசியாதான் கிறிஸ்மஸ் தாத்தாவாக...ஸாரி பாட்டியாகக் கருதப்படுகிறார்.
சாண்ட்ட கிளாஸ்:
சாண்ட்ட கிளாஸ் பெயரில் அநேக திரைப்படங்கள் வெளிவந்து சிறார்களை மகிழ்விக்கிறது. சாண்ட்ட கிளாஸ் ஒன்று, இரண்டு என்றும் 'The Year Without a Santa Claus', Santa visits Fifth Police District போன்ற திரைப்படங்கள் மிகப்பிரசித்திபெற்றவை